கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு... சுற்றுலா பயணிகள் செல்ல தற்காலிக தடை!

 
Coimbatore Courtalam Falls

கோவை குற்றாலத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் மறு அறிவிப்பு வெளியாகும் வரை சுற்றுலா பயணிகள் அருவிக்கு செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது.

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், கோவை மாவட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நொய்ய ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்து வருவதால் இன்று காலை கோவை குற்றாலம் அருவியில் திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக அருவியில் அதிகளவு தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. 

Coimbatore Courtalam Falls

இதனை அடுத்து, பாதுகாப்பு கருதி இன்று முதல் மறு அறிவிப்பு வெளியாகும் வரை கோவை குற்றாலம் அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு, கோவை மாவட்ட வனத்துறை தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது. மேலும், கோவை குற்றாலத்திற்கு செல்லும் சாலையின் நுழைவு வாயிலில் தடுப்புகள் அமைத்து, வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் இன்று அருவிக்கு ஏராளமானோர் சுற்றுலா வந்த நிலையில், வனத்துறை உத்தரவு காரணமாக ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.