மேட்டுப்பாளையம் அருகே பவானி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு: தண்ணீரில் சிக்கித்தவித்த 7 இளைஞர்களை மீட்ட தீயணைப்பு வீரர்கள்!

 
mettupalayam

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பவானி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கித்தவித்த 7 இளைஞர்களை, தீயணைப்புத்துறை வீரர்கள் பத்திரமாக மீட்டு கரை சேர்த்தனர்.

கோவை பீளமேடு பகுதியை சேர்ந்தவர்கள் சிரஞ்சீவி, சஞ்சய், ரவிகுமார், சரவணன், சதிஷ்குமார், கணேஷ்குமார், மணிகண்டன். நண்பர்களான 7 பேரும் நேற்று மாலை மேட்டுப்பாளையம் விளாமரத்துர் கிராமத்தில் உள்ள பவானி ஆற்றுக்கு சென்று குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது, ஆற்றில் குறைந்த அளவு தண்ணீர் சென்று கொண்டிருந்ததால் இளைஞர்கள் மைய பகுதியில் சென்று குளித்தனர். மாலையில் பில்லூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் ஆற்றில் திடீரென தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

drowning

இதனால் அதிர்ச்சிக்குள்ளான 3 இளைஞர்கள் ஆற்றில் மேடான பகுதிகளில் ஏறி நின்றனர். மேலும், ஆற்றின் நடுவில் இருந்த மரத்தின் மீது 4 பேர் ஏறிக் கொண்டனர். பின்னர் தங்களை மீட்கக்கோரி கரையில் இருந்தவர்களுக்கு சத்தமிட்டனர். இதனை கண்ட அந்த பகுதி பொதுமக்கள் உடனடியாக மேட்டுப்பாளையம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

அதன் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறை வீரர்கள், ஆற்றின் நடுவில் சிக்கிக்கொண்ட 7 பேரையும் கயிறு மூலம் மரத்தில் இருந்து இறக்கினர். தொடர்ந்து, அவர்களை பரிசல் மூலம் பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். தொடர்ந்து, அந்த இளைஞர்களுக்கு அறிவுரை கூறி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.