தூத்துக்குடி அருகே கடலில் தத்தளித்த மிளாவை மீட்ட மீனவர்கள்!
Mon, 16 Jan 20231673859717431

தூத்துக்குடி அருகே நடுக்கடலில் தத்தளித்த மிளா வகை மானை மீனவர்கள் பத்திரமாக மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
தூத்துக்குடி அருகே இன்று காலை கடலில் மிளா வகை மான் ஒன்று தத்தளித்து கொண்டிருந்தது. இதனை கண்ட இனிகோ நகர் பகுதி மீனவர்கள், பைபர் கடகு மூலம் கடலுக்குள் சென்று அங்கு தத்தளித்து கொண்டிருந்த மிளாவை மீட்டு, கரைக்கு கொண்டு வந்தனர். இதனை தொடர்ந்து, இது குறித்து தூத்துக்குடி வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் மிளாவை மீட்டு வாகனம் மூலம் வனத்துறை அலுவலகத்திற்கு எடுத்துச்சென்றனர். பின்னர் அந்த மான் வனப் பகுதியில் விடுவிக்கப்பட உள்ளது. முன்னதாக, கடலில் இருந்து மீட்கப்பட்டு கடற்கரையில் வைக்கப்பட்டிருந்த மிளாவை, அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.