லஞ்ச வழக்கில் பெண் இளநிலை பொறியாளருக்கு 7 ஆண்டுகள் சிறை ; உதகை லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு!

 
ooty

உதகையில் பெயர் மாற்று சான்றிதழ் வழங்க ரூ.1,800 லஞ்சம் பெற்ற வழக்கில் பெண் இளநிலை பொறியாளருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள பள்ளிமனை கிராமத்தை சேர்ந்தவர் சிவகுமார். இவர் கடந்த 2008ஆம் ஆண்டு தனது தொழிலாளர் குடியிருப்புக்கு பெயர் மாற்று சான்றிதழ் வழங்கக்கோரி, கீழ்குந்தா பேரூராட்சியில் இளநிலை பொறியாளராக பணிபுரிந்த ஜெயலட்சுமி(60) என்பவரை அணுகி உள்ளார். அப்போது, பெயர் மாற்று சான்றிதழ் வழங்க அவர் ரூ.1,800 லட்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிவகுமார், நீலகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தார். பின்னர் அவர்களது ஆலோசனைப்படி ரசாயனம் தடவிய ரூ.1,800-ஐ ஜெயலட்சுமியிடம் கொடுத்தபோது, லஞ்ச ஒழிப்புத்துறையினர் கையும், களவுமாக கைது செய்தனர்.

judgement

இந்த வழக்கின் விசாரணை உதகை லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கில் இறுதி விசாரணை நேற்று நிறைவடைந்த நிலையில், நீதிபதி ஸ்ரீதரன் தீர்ப்பு வழங்கினார். அப்போது, லஞ்சம் கேட்டதற்காக ஜெயலட்சுமிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1,000 அபராதமும், லஞ்சம் வாங்கிதற்காக 4 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.2,000 அபராதமும் என மொத்தம் 7 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து, 60 வயது முதியவரான ஜெயலட்சுமி, கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.