அரியலூர் அருகே விவசாயி மர்மமான முறையில் உயிரிழப்பு; உறவினர்கள் சாலை மறியல்!

 
Death

அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அருகே வயலுக்கு சென்ற விவசாயி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அருகே உள்ள தேளூரை சேர்ந்தவர் கோவிந்தசாமி(86). விவசாயியான இவர் கிராம நாட்டாமையாகவும் செயல்பட்டு வந்தார். இந்த நிலையில், இவர் நேற்று பிற்பகல் கிராமத்தில் உள்ள தனது வயலுக்கு கோவிந்தசாமி புறப்பட்டு சென்றார். சிறிது நேரத்திற்கு பின்னர் அங்கு அவர் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கயர்லாபாத் போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ariyalur

மேலும், அந்த பகுதிக்கு மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்தனர். அப்போது,  கோவிந்தசாமி கொலை செய்யப்பட்டதாகவும், குற்றவாளிகளை கண்டறிந்து கைது செயய வேண்டும் எனவும் கூறி உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் விளாங்குடி ஆரம்ப சுகாதார நிலையம் அருகே திருச்சி- சிதம்பரம் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து, அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது, பிரேத பரிசோதனையில் அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தால் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அதனை ஏற்று, அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.  தொடர்ந்து, கயர்லாபாத் போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.