கடன் தொல்லையால் விவசாயி விஷம் குடித்து தற்கொலை... கிருஷ்ணகிரி அருகே சோகம்!

 
poison

கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளியில் கடன் தொல்லையால் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ள எடவள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மாதுராஜ் (57). விவசாயி. இவருக்கு சாரதா என்ற மனைவியும், 3 பிள்ளைகளும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமான நிலையில், மாதுராஜ் கடந்த சில வருடங்களாக உத்தனப்பள்ளி பகுதியில் உள்ள சாராதவின் பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில், மாதுராஜ் குடும்ப செலவிற்காக தெரிந்தவர்களிடம் கடன் பெற்றிருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் கடனை சரிவர கட்டாததால் கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு அழுத்தம் கொடுத்து வந்துள்ளனர். இதனால் மனமுடைந்து காணப்பட்ட மாதுராஜ் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியேறி உள்ளார்.

krishnagiri

இதனால் குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடி வந்துள்ளனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இந்த நிலையில், உத்தனப்பள்ளி - சூளகிரி சாலையில் உள்ள தனியார் அட்டைப்பெட்டி நிறுவனத்தின் அருகில் மதுவில் விஷம் கலந்து குடித்த தற்கொலை செய்துகொண்ட நிலையில் சடலமாக கிடந்தார்.  தகவலின் பேரில் உத்தனப்பள்ளி போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.  மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.