பேனர் கிழிப்பு விவகாரத்தில் விசிக பிரமுகர் வெட்டிக்கொலை... தூத்துக்குடியில் பயங்கரம்!

 
murder

தூத்துக்குடியில் மகன் பேனரை கிழித்ததால் ஆத்திரத்தில் அவரது தந்தையான விடுதலை சிறுத்தை கட்சி பிரமுகர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி அந்தோணியார்புரம் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன்(43). இவர் ஆட்டிறைச்சி கடை வைத்து நடத்தி வருகிறார். மேலும், விடுதலை சிறுத்தைகள் கட்சியில் நிர்வாகியாக உள்ளார். இந்த நிலையில், கடந்த 30ஆம் தேதி  மாரியப்பன் வீட்டின் அருகே மாற்று சமூகத்தை சேர்ந்தவர்கள், அச்சமூக தலைவரின் புகைப்படத்துடன் கூடிய பேனர் வைத்துள்ளனர். அந்த பேனர் மர்மநபர்களால் சேதப்படுத்தப்பட்ட நிலையில், அதனை மாரியப்பனின் 14 வயது மகன் கிளித்ததாக கூறி, அதே பகுதியை சேர்ந்த சண்முகவேல் என்பவர் தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

tuti gh

அதன் பேரில், போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். இந்த நிலையில், நேற்று மாரியப்பன் தனது வீட்டில் இருந்தபோது, அங்கு வந்த மர்மநபர்கள் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்தனர். மேலும், அவர்களை தடுக்க முயன்ற மாரியப்பனின் மகனுக்கும் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தென்பாகம் போலீசார், மாரியப்பனின் மகனை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், கொலையான மாரியப்பனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக  அனுப்பி வைத்தனர். தொடர்ந்து,  இந்த கொலை சம்பவம் தொடர்பாக தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அதே பகுதியை சேர்ந்த சண்முகவேல் உள்ளிட்டோரை தீவிரமாக தேடி வருகின்றனர். பேனரை மகன் சேதப்படுத்தியதால் விசிக பிரமுகர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.