கோவையில் தனியார் தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டுயானையால் பரபரப்பு!

 
wild elephant

கோவை மாவட்டம் வாளையாறு அருகேயுள்ள புதுப்பதி மலை கிராமத்தில் தனியார் தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டுயானையால்  பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டம் தமிழக - கேரள எல்லையில் உள்ள வாளையாறு அருகே புதுப்பதி மலைக்கிராமம் அமைந்துள்ளது. வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள இந்த கிராமத்தில் இரவு நேரங்களில் காட்டு யானைகள் உலா வருவது வழக்கம். இந்த நிலையில், நேற்று மாலை புதுபதி மலைக் கிராமத்தில் உள்ள நந்தகுமார் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில், திடீரென ஒற்றை ஆண் காட்டு யானை புகுந்தது.

wild elephant

இதனை கண்டு தோட்டத்தில் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் மற்றும் கிராம மக்கள் சத்தம் எழுப்பி யானையை வனப்பகுதிக்குள் விரட்ட முயன்றனர். சிறிது நேரம் தோட்டத்தில் நின்றிருந்த அந்த காட்டுயானை பின்னர் அருகில் உள்ள குட்டையில் தண்ணீர் அருந்திவிட்டு, வனப்பகுதிக்குள் சென்றது. அப்போது, சம்பவ இடத்திற்கு வந்த மதுக்கரை வனச்சரக வன ஊழியர்கள், காட்டுயானையை அடர்ந்த வனப்பகுதிகள் விரட்டினர்.

இந்த சம்பவம் புதுப்பதி மலைவாழ் கிராம மக்களிடையை பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே, தோட்டத்தில் ஒற்றை ஆண் காட்டுயானை உலா வரும் வீடியோ காட்சி தற்போது சமுக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.