வாணியம்பாடி அருகே வெள்ளகுட்டையில் எருதுவிடும் விழா: 300-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு!

 
bull taming

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே வெள்ளகுட்டை பகுதியில் நடைபெற்ற எருதுவிடும் விழாவில் 300-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்துகொண்டன.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள வெள்ளகுட்டை பகுதியில் பொங்கல் பண்டிகையை ஒட்டி இன்று எருது விடும் திருவிழா நடைபெற்றது. இந்த போட்டியில் வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும், ஆந்திர மாநிலத்தில் இருந்தும் வந்த  300-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. இந்த போட்டியை வருவாய் கோட்டாச்சியர் பிரேமலதா மற்றும் வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.

vaniyambadi

மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. வாடிவாசலில் இருந்து வெளியேறிய காளைகள் மின்னல் வேகத்தில் பந்தைய தூரத்தை நோக்கி சீறிப்பாய்ந்து சென்றன. அப்போது, பாதையின் இருபுறமும் திரண்டு நின்ற மாடுபிடி வீரர்கள் காளைகளின் திமிலை பிடித்து தட்டி அதனை வேகத்தை தணிக்க முயன்றனர். இறுதியாக குறைந்த நேரத்தில் இலக்கை எட்டி முதலிடம் பிடித்த காளைக்கு ரூ.1 லட்சமும், 2ஆம் இடம் பிடித்த காளைக்கு ரூ. 80 ஆயிரமும், மூன்றாம் இடம் பிடித்த காளைகக்கு பரிசாக 65 ஆயிரமும் பரிசாக வழங்கப்பட்டது.

மேலும், போட்டியாளர்களுக்கு 50-க்கும் மேற்பட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. எருது விடும் விழாவை திருப்பத்தூர், வாணியம்பாடி பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கண்டு களித்தனர். போட்டியின்போது காளைகள் முட்டியதில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், அவர்களுக்கு மருத்துக்குழுவினர் சிகிச்சை அளித்தனர்.