"ஈரோடு பல்நோக்கு மருத்துவமனை வரும் மார்ச் மாதம் திறக்கப்படும்" - சட்டமன்ற உறுதிமொழி குழு தலைவர் உதயசூரியன் தகவல்!

 
erode

ஈரோடு அரசு பொது மருத்துவமனையில் கட்டப்பட்டு வரும் பல்நோக்கு மருத்துவ பிரிவு கட்டிடம் வரும் மார்ச் மாதம் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என்று சட்டமன்ற உறுதிமொழி குழு தலைவர் உதயசூரியன் தெரிவித்தார்

ஈரோடு அரசு பொது மருத்துவமனையில் கட்டப்பட்டு வரும் பல்நோக்கு மருத்துவ பிரிவை, நேற்று சட்டமன்ற உறுதிமொழி குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆய்விற்கு பின்னர் குழுவின் தலைவர் உதயசூரியன் பேசியதாவது - பல்நோக்கு மருத்துவ பிரிவு ரூ.64 கோடியில் 8 மாடி கட்டிடமாக கட்டப்பட்டு வருகிறது. 90 சதவீத பணிகள் முடிந்து விட்டன. வரும் டிசம்பருக்குள் அனைத்து பணிகளையும் முடிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இக்கட்டிட பணிக்கு நிதி ஒதுக்கும் போதே, நவீன மருத்துவ கருவிகள் வாங்க அரசு நிதி ஒதுக்கி உள்ளது.

எனவே 512 படுக்கை வசதிகளுடன், அனைத்து வகையான சிறப்பு பிரிவுகளுடன் பல்நோக்கு மருத்துவ பிரிவு மார்ச் மாதத்தில் இருந்து செயல்படும். இதில் 22 மருத்துவர்கள் பணிபுரிவார்கள். சிறுநீரகவியல், இதயம், எலும்பு, நரம்பு, குழந்தைகள், புற்றுநோய் பிரிவு என அனைத்து வசதிகளும் இந்த கட்டிடத்தில் இருக்கும். பொதுமக்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு என தனித் தனியே கேண்டீன்கள் ஏற்படுத்தி தர அறிவுறுத்தி உள்ளோம் என்றார்.

kdkk

இது அதிகாரிகள் கூறும்போது, தற்போதுள்ள அரசு பொது மருத்துவமனையில் 88 மருத்துவர்கள் பணியிடம் உள்ளது. 2 மட்டும் காலியாக உள்ளது. புதிதாக கட்டப்படும் பல்நோக்கு மருத்துவமனைக்கு 22 மருத்துவர்கள் பணியிடம் உருவாக்கப்படுகிறது. அதில் 5 மருத்துவர்கள் அவசர பிரிவையும், எஞ்சியவர்கள் சிறப்பு சிகிச்சை பிரிவுகளிலும் பணியாற்றுவர். புதிய கட்டிடத்தில் 5 லிஃப்டுகளும், 7 அறுவை அரங்குகளும் செயல்படும்.

நவீன மருத்துவ கருவிகள் இந்த புதிய கட்டிடத்தில் நிறுவ அரசு ஏற்கனவே ரூ.26 கோடி நிதி ஒதுக்கி உள்ளது. எனவே திட்டத்தின் மொத்த மதிப்பு ரூ.88 கோடியாகும்.  இந்த ஆய்வின்போது சட்டமன்ற உறுதிமொழி குழு உறுப்பினர்கள் திருப்பூர் செல்வராஜ், மகாராஜா, சின்னப்பா,  அர்ஜுனன் மற்றும் ஆட்சியர் கிருஷ்ணன் உன்னி, மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம் மற்றும் மருத்துவமனை உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்