தொடர் மழையால் ஈரோடு ஜவுளி சந்தையில் மொத்த வியாபாரம் பாதிப்பு!

 
textile market

தொடர் மழையின் காரணமாக வெளி மாநில வியாபாரிகள் வராததால் ஈரோடு ஜவுளி சந்தையில் மொத்த வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே கனி மார்க்கெட் ஜவுளி சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் திங்கட்கிழமை இரவு தொடங்கி செவ்வாய்க்கிழமை மதியம் வரை ஜவுளி சந்தை நடைபெறுகிறது. இந்த சந்தைக்கு தமிழ்நாட்டின்பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்து மொத்த விலையில் துணிகளை கொள்முதல் செய்து செல்வார்கள். விசேஷ நாட்களில் ரூ.4 கோடி வரை வர்த்தகம் நடைபெறும்.

தீபாவளி பண்டிகையை ஒட்டி கடந்த சில வாரங்களாக, ஈரோடு ஜவுளி சந்தையில் வியாபாரம் களை கட்டியது. வெளி மாநில வியாபாரிகளும், வெளி மாவட்ட வியாபாரிகளும் அதிகளவில் வந்திருந்து துணிகளை வாங்கி சென்றனர். எனினும் கடந்த  வாரம் கூடிய சந்தையில் வெளி மாநில வியாபாரிகள் வராததால் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. 

textile market

இந்த நிலையில் இந்த வாரம் ஜவுளி சந்தை கூடிய நிலையில், தொடர் மழை காரணமாக வெளி மாநிலத்திலிருந்து வியாபாரிகள்  குறைந்த அளவே வந்திருந்தனர். மழையின் காரணமாக நேற்று கேரளாவில் இருந்து வியாபாரிகள் வரவில்லை. ஆந்திராவிலிருந்து மட்டும் சில வியாபாரிகள் வந்திருந்தனர். இதனால் மொத்த வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் நேற்று 10 சதவீத அளவிற்கே மொத்த வியாபாரம் நடைபெற்றது. அதேவேளையில், வெளி மாவட்டங்களில் இருந்து உள்ளூர் வியாபாரிகள் அதிகளவில் வந்திருந்ததால் ஜவுளி சந்தையில் சில்லரை வியாபாரம் ஓரளவு நடைபெற்றது.

இதனால் நேற்று 30 சதவீதம் சில்லரை வியாபாரம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர். தற்போது மழைக்காலம் தொடங்கி விட்டதால் குளிர் காற்று வீசுகிறது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விதவிதமாக சொட்டர்கள் அதிகளவில் விற்பனைக்கு வந்துள்ளன. சொட்டர் விற்பனையும் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதேபோல் கம்பளி ஆடைகள் விற்பனையும் நன்றாக இருந்தது.