ஈரோட்டில் இளைஞரை கொன்று சாக்கு மூட்டையில் உடல் வீச்சு... 3 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை!

 
murder

ஈரோட்டில் கொலை செய்து உடலை சாக்குமூட்டையில் கட்டி கழிவுநீர் கால்வாயில் வீசிச் சென்ற சம்பவத்தில், குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைத்து எஸ்பி சசிமோகன் உத்தரவிட்டுள்ளார். 

ஈரோடு மோளகவுண்டம் பாளையம் ஜீவானந்தம் வீதியில் உள்ள கழிவுநீர் கால்வாயில் நேற்றிரவு கடும் துர்நாற்றம் வீசியுள்ளது. அந்த பகுதி பொதுமக்கள் சென்று பார்த்தபோது, அங்கு கிடந்த மூட்டையில் இருந்து துர்நாற்றம் வீசுவது தெரியவந்தது. இதனால் சந்தேகமடைந்த பொதுமக்கள் ஈரோடு தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன் பேரில், மாவட்ட எஸ்பி சசிமோகன் தலைமையில், ஈரோடு டவுன் டிஎஸ்பி ஆனந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று கழிவுநீர் கால்வாயில் கிடந்த சாக்குமூட்டையை மீட்டு அதனை பிரித்து பார்த்தனர்.

அப்போது, மூட்டையில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் அழுகிய நிலையில் கிடந்தது தெரியவந்தது. இதனை அடுத்து, போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக  பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையான நபர் யார் என்பது குறித்தும், எந்த பகுதியை சேர்ந்தவர் என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

perundurai govt hospital

முதற்கட்ட விசாரணையில் மர்மநபர்கள் கொலை செய்த சடலத்தை அந்த பகுதியில் கொண்டு வந்து வீசியது தெரிய வந்தது. இதனால் ஜீவானந்தம் வீதிக்கு செல்லும் கரூர் சாலை, கல்யாணசுந்தரம் வீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். இந்த நிலையில், கொலையாளிகளை பிடிக்க மாவட்ட எஸ்பி சசிமோகன் உத்தரவின் பெயரில் டவுன் டி.எஸ்.பி ஆனந்தகுமார் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சோமசுந்தரம், கோமதி, தீபா ஆகியோர் கொண்ட 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

இதனை தொடர்ந்து, விசாரணையை தீவிரப்படுத்தி உள்ள தனிப்படை போலீசார் ஈரோடு, திருப்பூர், கோவை, சேலம், நாமக்கல், கரூர் போன்ற பகுதியில் உள்ள காவல் நிலையங்களில் காணாமல் போனவர்கள் பற்றிய விவரங்களை சேகரித்து வருகின்றனர்.