ஈரோடு வேளாளர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி பட்டமளிப்பு விழா... 927 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கல்!

 
convocation

ஈரோடு வேளாளர் பொறியியல் கல்லூரியில் இன்று நடைபெற்ற 17-வது பட்டமளிப்பு விழாவில், இஸ்ரோ விஞ்ஞானி செந்தில்குமார், 927 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

ஈரோடு வேளாளர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் இன்று 17-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு வேளாளர் கல்வி அறக்கட்டளையின் தலைவர் எஸ்.எஸ்.கந்தசாமி, செயலாளர் எஸ்.டி.சந்திரசேகர், பொருளாளர் பி.கே.பி.அருண் ஆகியோர் விழாவிற்கு தலைமை தாங்கினர். இதில் சிறப்பு விருந்தினராக ஸ்ரீஹரிகோட்டா சதிஷ் தவான் விண்வெளி ஆய்வு மைய விஞ்ஞானி செந்தில் குமார் கலந்துகொண்டு  927 பட்டதாரிகளுக்கு பட்டங்களை வழங்கினார். மேலும், தரவரிசைப் பட்டியலில் சிறப்பிடம் பிடித்த 60 மாணவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். 

convocation

இதனை தொடர்ந்து மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய விஞ்ஞானி செந்தில்குமார், ஆசிரியர் தினம் குறித்தும், தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். தற்போதைய மாணவர்களுக்கு நிறைய கவனச்சிதறல்கள் இருப்பதாகவும், அவர்களை வடிவமைப்பதில் கல்லூரி ஆசிரியர்களின் ஊக்கம் மிகவும் உறுதுணையாக இருப்பதாகவும் கூறினார். எதிர்காலத்தில், உயிரியலுடன் பொறியியல் உலகை ஆளப்போவதாக கூறிய அவர், தற்போது அனைத்து பிரிவு மாணவர்களுக்கும் டேட்டா சயின்ஸ் மிகவும் முக்கியமானது என்றும், டேட்டா சயின்ஸில் மெட்ராஸ் ஐஐடி மூலம் பல குறுகிய கால மற்றும் நீண்ட கால படிப்புகள் ஆன்லைனில் வழங்கப்படுவதாகவும், அங்கு சுமார் 2 லட்சம் மாணவர்கள் பதிவு செய்து பயனடையலாம் என்றும் அவர் கூறினார். 

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் மற்றும் படிப்பில் சேரும் பெண் மாணவர்களுக்கு ஐஐடி, மெட்ராஸ் மூலம் உதவித்தொகை வழங்கப்படுவதாக கூறிய செந்தில்குமார், பின்னர் இஸ்ரோவில் சேர்வதற்கான நடைமுறை குறித்து தெரிவித்தார். மேலும், கல்லூரி நாட்களில் ஒரு மாணவருக்கு ஆய்வகத்தில் அதிக நடைமுறை அறிவு தேவை என்றும் அவர் வலியுறுத்தினார்.  இவ்விழாவில் இஸ்ரோ விஞ்ஞானி எஸ்.செல்வகுமார், வேளாளர் கல்வி அறக்கட்டளை உறுப்பினர்கள் ராஜமாணிக்கம், குலசேகரன்,  வேலுமணி,  முதல்வர் ஜெயராமன், டீன் பேராசிரியர் ஜெயச்சந்தர், தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி வள்ளுவன், நிர்வாக மேலாளர் பெரியசாமி, துறைதலைவர்கள், ஆசிரிய ஆசிரியைகள், பணியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் இவ்விழாவில்  கலந்து கொண்டனர்.