ஈரோடு - பாலக்காடு பயணிகள் ரயில் மீண்டும் இயக்கம்... காங்கிரசார் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!

 
palakad passenger

ஈரோட்டில் இருந்து பாலக்காடு வரை செல்லும் பயணிகள் ரயில் சேவை இரண்டரை ஆண்டுகளுக்கு பின் நேற்று முதல் தொடங்கியது. இதனையொட்டி, காங்கிரஸ் கட்சியினர் பயணிகளுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர். 

ஈரோட்டில் இருந்து பாலக்காடு வரை நாள்தோறும் பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரயில் மூலம் ஈரோட்டில் இருந்து திருப்பூர், கோவைக்கு வேலைக்கு செல்பவர்களும், பள்ளி - கல்லுரிகளுக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு செல்லும் நோயாளிகள் என ஆயிரக்கணக்கானோர் பயனடைந்து வந்தனர். இந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக கடந்த 2.5 ஆண்டுகளாக இந்த ரயில் இயக்கப்படவில்லை. 

cong

தற்போது கொரோனா தாக்கம் குறைந்துள்ளதால் நிறுத்தப்பட்ட பல்வேறு ரயில் சேவைகள் மீண்டும் துவங்கப்பட்டு வருகிறது. இதேபோல், ஈரோடு - பாலக்காடு பயணிகள் ரயிலையும் மீண்டும் இயக்க வேண்டும் என  பொதுமக்கள், அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கோரிக்கைகள் விடுத்து வந்தனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றது. பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று நேற்று முதல் ஈரோடு - பாலக்காடு பயணிகள் ரயில் மீண்டும் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்து இருந்தது 

அதன்படி, நேற்று காலை 7.10 மணி அளவில் ஈரோடு ரயில் நிலையத்தில் இருந்து, பாலக்காட்டிற்கு பயணிகள் ரயில் புறப்பட்டு சென்றது. இதனையொட்டி, காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை துறை தலைவர் கே.என்.பாஷா தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் ரயிலுக்கு மாலை அணிவித்தும், பயணிகளுக்கு இனிப்புகளை வழங்கியும் ரயிலை வழியனுப்பி வைத்தனர். இதில், காங்கிரஸ் ஊடகப்பிரிவு முகமது அர்சத்,  சிறுபான்மை துறை எம்.ஜவஹர் அலி, சி.எம். ராஜேந்திரன், மாவட்ட பொது செயலாளர்கள் எம்.ஆர்.அரவிந்த தாஸ், கனகராஜ், ஷாகுல் ஹமீத், என் சி டபிள்யூ சி தலைவி ஆர்.கிருஷ்ணவேணி, மாவட்ட நிர்வாகி கே ஜே டிட்டோ, சிறுபான்மை துறை தலைவர் சூர்யா சித்திக் மற்றும் பலர் கலந்து கொண்டனர்