ஈரோடு மாநகராட்சி பூங்கா மதில்சுவரை சேதப்படுத்திய விவகாரம்... திமுக கவுன்சிலர் மீது பாஜகவினர் புகார்!

 
erode park

ஈரோடு மாநகராட்சி பூங்கா மதில்சுவரை அனுமதியின்றி இடித்து சேதப்படுத்திய விவகாரத்தில் திமுக கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பாஜக சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். 

ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட குமரேசன் நகர் டெலிபோன் நகர் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.47 லட்சம் மதிப்பில் பொழுது போக்கு பூங்கா அமைக்கப்பட்டது. இந்த நிலையில், 20-வது வார்டு திமுக கவுன்சிலரான மோகன்குமார் என்பவர், மாநகராட்சியின் அனுமதி பெறாமல் தனது சொந்த பயன்பாட்டிற்காக பூங்காவின் மதில் சுவரை இடித்து சேதப்படுத்தியதுடன், சாலை அமைக்க முயன்றுள்ளார். இதற்கு அந்த பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தனர்.

erode park

இந்த நிலையில், பூங்கா சுவரை உடைத்து சேதப்படுத்திய விவகாரத்தில் 20-வது வார்டு திமுக கவுன்சிலர் மோகன்குமார் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, நேற்று மாவட்ட ஆட்சியரிடம், ஈரோடு தெற்கு மாவட்ட பாஜக சார்பில் மனு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், ஈரோடு தெற்கு மாவட்ட பாஜக பொதுச் செயலாளர் செந்தில், ஈரோடு நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பார்வையாளர் பழனிச்சாமி, பெரியசேமூர் கிழக்கு மண்டல தலைவர் மெய்யானந்தம், ஓபிசி அணி பொது செயலாளர் நிர்மல், ஊடகப்பிரிவு தலைவர் அண்ணாதுரை, வீரப்பன்சத்திரம் கிழக்கு மண்டல தலைவர் சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.