ஈரோடு கோட்டை ஈஸ்வரன் கோவில் கும்பாபிஷேக விழா... திரளான பக்தர்கள் பங்கேற்பு!

ஈரோடு கோட்டை ஈஸ்வரன் கோவில் கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.
ஈரோடு கோட்டை பகுதியில் பழமையான கோட்டை ஈஸ்வரன் கோவில் அமைள்ளது. இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான இந்த கோவிலின் கும்பாபிஷேக பணிகள் கடந்த 2019ஆம் ஆண்டு தொடங்கி நடைபெற்று வந்தது. கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. இதனையொட்டி, கோவில் வளாகத்தில் பாலக்கால் நடப்பட்டு, யாக சாலை பூஜைகள் நடைபெற்று வந்தன. மேலும் நாள்தோறும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில், நேற்று கும்பாபிஷேக விழாவையொட்டி, அதிகாலை 8ஆம் கால யாக பூஜை நடைபெற்றது.
தொடர்ந்து காலை 10.35 மணியளவில் ராஜ கோபுர விமானங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு விழா நடைபெற்றது. இந்த விழாவில் ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி திருப்பூர், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். கும்பாபிஷேகா விழாவில் மொடக்குறிச்சி தொகுதி பாஜக எம்எல்ஏ சரஸ்வதி, மாநகராட்சி மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ், கோவில் இணை ஆணையர் பரஞ்சோதி, உதவி ஆணையர் அன்னக்கொடி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.