திருப்பூரில் சமத்துவ பொங்கல் விழா: நொய்யல் ஆற்றங்கரையில் 3 ஆயிரம் பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு!

 
tirupur

திருப்பூர் நொய்யல் ஆற்றங்கரையில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் 3 ஆயிரம் பெண்கள் கலந்துகொண்டு பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.

திருப்பூரில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா, வளர்மதி பாலம் அருகே உள்ள நொய்யல் ஆற்றங்கரையோரம் நடைபெற்று வருகிறது. மாநகராட்சியின் நொய்யல் பண்பாட்டு அமைப்பு மற்றும் ஜீவநதி நொய்யல் சங்கம் சார்பில் 3 நாட்களாக நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் முதல் 2 நாட்கள் மாலை நேரத்தில் பல்வேறு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

tirupur

விழாவின் இறுதி நாளான இன்று திருப்பூர் நொய்யல் ஆற்றங்கரையோரம், மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகளில் வசித்து வரும் அனைத்து மதங்களை சேர்ந்த 3000 பெண்கள் கலந்து கொண்டு, பொங்கல் வைத்து சூரிய பகவானுக்கும், உழவர்களுக்கு துணையாக உள்ள  கால்நடைகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.

tiruppur

இந்த பொங்கல் விழாவில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத்,  மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், மாநகராட்சி ஆணையர் கிராந்தி குமார்பாடி, மாநகர காவல் ஆணையர் பிரவீன்குமார் அபிநவ் உள்ளிட்டோர் பாரம்பரிய முறையில் வேட்டி சட்டையில் கலந்து கொண்டு சமத்துவ பொங்கலை தொடங்கி வைத்தனர்.

tiruppur

இதனை தொடர்ந்து, தமிழர்கள் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளான வள்ளி கும்மியாட்டம், பெருஞ்சலங்கை ஆட்டம், பறை இசை மற்றும் நாட்டுப்புற நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு கலைநிகழ்ச்சிகளை கண்டுகளித்தனர்.