காஞ்சிபுரத்தில் சமத்துவ பொங்கல் விழா: கிராம பெண்களுடன் இணைந்து பொங்கல் வைத்த ஆட்சியர்!

 
kanchi

காஞ்சிபுரம் மாவட்டம் சித்தேரிமேடு கிராம சமத்துவபுரத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல்விழாவில் ஆட்சியர் ஆர்த்தி கலந்துகொண்டு பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினார்.

காஞ்சிபுரம் மாவட்டம் திம்ம சமுத்திரம் ஊராட்சிக்குட்பட் சித்தேரிமேடு கிராம சமத்துவபுரத்தில் இன்று சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி கலந்து கொண்டு கிராமத்து பெண்களுடன் இணைந்து பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினார். தொடர்ந்து, மகளிர் சுய உதவிக்குழுவினரால் போடப்பட்ட கோலங்களை பார்வையிட்ட ஆட்சியர் ஆர்த்தி, பின்னர் நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளை பார்வையிட்டார். இதில் தெருக்கூத்து, பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற நடன நிகழ்ச்சிகள், உறியடித்தல், கயிறு இழுத்தல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. முடிவில் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவியர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர் மற்றும் தெருக்கூத்து கலைஞர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

kanchi

பின்னர் அவர் பேசியதாவது :- காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 274 ஊராட்சிகளிலும் சமத்துவ பொங்கல் விழா நடத்தப்பட்டு வருகிறது. இவ்விழாவினையொட்டி, ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தூய்மை செய்யப்பட்டு, சுகாதார பணியாளர்கள், தூய்மை காவலர்கள், மேல்நீர் தொட்டி இயக்குபவர்களை பாராட்டி ஊக்கப்படுத்த வேண்டும். ஊராட்சியில் அனைவரும் ஒன்று கூடி சமத்துவ உறுதிமொழியை எடுத்துக்கொள்ள வேண்டும். அனைவரும் வேற்றுமைகளை மறந்து அன்பையும், சமூக நல்லிணக்கத்தையும் வளர்க்க வேண்டும் என ஆட்சியர் ஆர்த்தி தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் எம்.பி. செல்வம், காஞ்சிபுரம் ஒன்றியக்குழு தலைவர் மலர்கொடி குமார், காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சிக்குழு துணை தலைவர் நித்தியா சுகுமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.