"மின் கட்டண உயர்வு மக்களை பெரிதும் பாதிக்காது" - அமைச்சர் முத்துசாமி பேட்டி!

 
chess

மின் கட்டண உயர்வு மக்களை பெரிதும் பாதிக்காது என ஏற்கனவே மின்துறை அமைச்சர் விளக்கி உள்ளதாக,  வீட்டுவசதித் துறை  அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டத்தை  வீட்டுவசதித் துறை அமைச்சர் முத்துசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் முத்துசாமி, இந்தியாவில் எப்போதும் நடைபெறாத அளவு 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளதாகவும், இதில் சுமார் 188 நாடுகளை சேர்ந்த சுமார் 2 ஆயிரம் விளையாட்டு வீரர்கள், இதில் பங்கேற்பதாகவும் தெரிவித்தார். இது ஒட்டுமொத்த விளையாட்டு துறையை ஊக்குவிக்க எடுக்கும் நடவடிக்கை என்றும் அமைச்சர் கூறினார்.

chess

ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரி வளாகத்தில் சுமார் 40 ஏக்கரில் மிக பிரமாண்டமாக உள் விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்த அமைச்சர் முத்துசாமி, எனவே ஈரோடு வ.உ.சி மைதானத்தில் சிந்தடிக் ஓடுதளம் அமைக்கும் திட்டம், அங்கு மாற்றப்பட உள்ளதாக கூறினார். மேலும், உள் விளையாட்டு அரங்கில் பல்வேறு விளையாட்டுகளுக்கான அடிப்படை கட்டுமான வசதிகள் ஏற்படுத்தப்படும் என்றும் கூறினார்.அதிமுகவினரிடம் பாராட்டு எதிர்பார்க்க முடியாது என கூறிய அவர்,  மின் கட்டண உயர்வு மக்களை பெரிதும் பாதிக்காது என்று ஏற்கனவே மின்துறை அமைச்சர் விளக்கி உள்ளதாக கூறினார்.

மேலும், தமிழகத்தின் நிதிநிலை எந்த அளவு உள்ளது என்று மக்களுக்கே தெரியும் என்றும், அதனால் தான் வீட்டு வரி கூட உயர்த்தப்பட்டதாகவும் தெரிவித்தார். ஈரோடு நகரில் குடிநீர் பிரச்சினை நிலவுவதற்கு முன்பிருந்த அதிமுக அரசே காரணம் என கூறிய அமைச்சர் முத்துசாமி, ஸ்மார்ட் சிட்டி திட்டம், ஊராட்சிக் கோட்டை குடிநீர் திட்டத்தில் பல்வேறு குறைபாடுகள் உள்ளதாகவும், அவற்றை முறையாக அதிமுக அரசு செயல்படுத்தவில்லை என்றும் கூறினார். இது குறித்து ஆய்வு மேற்கொண்டு குறைகளை களைய நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார்