ஜோலார்பேட்டையில் மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் பலி!

 
jolarpet

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் மின்மாற்றியில் பழுதை சரிசெய்த போது மின்சாரம் தாக்கி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். 

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே உள்ள இடையம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜா மகன் முருகேசன் (32). இவர் ஜோலார்பேட்டை சந்தைக்கோடியூரில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு நந்தினி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. நந்தினி தற்போது 6 மாத கர்ப்பிணியாக உள்ளார். நேற்று காலை நந்தினிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

tirupattur gh

இந்த நிலையில், நேற்று காலை முதலே ஜோலார்பேட்டை பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் நகராட்சி அலுவலகம் அருகே மங்கம்மாள் குளம் பகுதியில் செயல்பட்டு வரும் ஊதுபத்தி நிறுவனத்தில் மின்சாரம் தடைபட்டது. இது குறித்து அதிகாரிகள் அளித்த தகவலின் பேரில் மின்வாரிய ஊழியர் முருகேசன் பழுதை சரிசெய்யும் பணிக்கு சென்றுள்ளார். ஊதிபத்தி நிறுவனம் அருகே உள்ள மின்மாற்றியில் ஏறி பழுதை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக முருகேசன் மீது மின்சாரம் பாய்ந்தது.

இதில் முருகேசன் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து அங்கு வந்த ஜோலார்பேட்டை போலீசார், முருகேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனைவியின் வளைகாப்பு தினத்தன்றே கணவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.