அதிமுக தற்காலிக பொதுச்செயலாளராக இபிஎஸ் தேர்வு: ஈரோட்டில் தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

 
admk

அதிமுக தற்காலிக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை ஒட்டி, ஈரோட்டில் அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர்.

சென்னையில் இன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, கட்சியின் தற்காலிக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அதேபோல், கே.பி.முனுசாமி, அதிமுகவின் துணை பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இபிஎஸ் தற்காலிக பொதுச்செயலாளராக தேர்வானதை அடுத்து, தமிழகம் முழுவதும் அவரது ஆதரவாளர்கள் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.அதன் ஒரு பகுதியாக, ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் பகுதியில் மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் வீரக்குமார் தலைமையில் அதிமுகவினர் பட்டாசுகளை வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும்  கொண்டாடடினர்.

erode

அப்போது பேசிய வீரகுமார், எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டது தொண்டர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாகவும், இது அதிமுகவை மேலும் வலுப்படுத்துவதற்கும், விரைவில் அதிமுக தலைமையில் ஆட்சி மாற்றம் வருவதற்கும் பெரிதும் உதவும் என்றும் கூறினார். மேலும், அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடியார் விரைவில் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில், அதிமுக நிர்வாகிகள், மாணவர் அணி மாவட்ட இணைச் செயலாளர் யுனிவர்சல் நந்தகோபால், 46 புதூர் பஞ்சாயத்து தலைவர் பிரகாஷ், விவசாய பிரிவு இணைச் செயலாளர் நல்லசாமி, ஜெயலலிதா பேரவை மாவட்ட இணைச் செயலாளர் சோலார் லோகநாதன், பெரியார் நகர் பகுதி சூரிய சேகர், வீரப்பன் சத்திரம் நகர எம்ஜிஆர் மன்ற செயலாளர் மூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.