சென்னிமலை அருகே மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை!

 
dead body

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே குழந்தை இல்லாத ஏக்கத்தில் மூதாட்டி எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த அனுமன்பள்ளி, நல்லகவுண்டன் பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் (75). இவரது மனைவி ஜானகி (63). இவர்களுக்கு திருமணம் ஆகி 43 ஆண்டுகளாகும் நிலையில், இன்னும் குழந்தை பிறக்கவில்லை. இதனால் தனக்கு குழந்தை இல்லையே என ஜானகி மனவேதனையுடன் காணப்பட்டு வந்துள்ளார். மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்பு குழந்தை இல்லாததால் இருவரும் ஒன்றாக இறந்துவிடலாம் என தனது கணவரிடம் தெரிவித்துள்ளார்.

generic erode

அப்போது, சண்முகம் அவருக்கு ஆறுதல் கூறியுள்ளார். இந்த நிலையில், சம்பவத்தன்று அதிகாலை 2 மணி அளவில் ஜானகி திடீரென வாந்தி எடுத்துள்ளார். இதுகுறித்து சண்முகம் விசாரித்தபோது தான் எலி பேஸ்ட்டை சாப்பிட்டு விட்டதாக தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் ஜானகியை மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஜானகி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த குறித்து வெள்ளோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குழந்தை இல்லாத ஏக்கத்தில் மூதாட்டி எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.