தென்காசி அருகே முதியவர் கழுத்தை நெரித்துக்கொலை!

 
murder

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே முதியவர் கழுத்து நெரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகேயுள்ள இலஞ்சி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கோட்டைமாடன். விவசாயி. இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில், நேற்று அதிகாலை கோட்டைமாடன் தனக்கு சொந்தமான மாந்தோப்புக்கு புறப்பட்டு சென்றார். பின்னர் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர், மாந்தோப்புக்கு சென்று பார்த்துள்ளனர்.

dead body

அப்போது, கோடடைமாடன் வாயில் துணி கட்டப்பட்ட நிலையில் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், குற்றாலம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கோட்டைமாடன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து, இந்த கொலை சம்பவம் தொடர்பாக கோட்டைமாடன் மகள் சந்திரா அளித்த புகாரின் பேரில் குற்றாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, முதியவரை கொலை செய்த நபர்கள் குறித்தும், அவரது கொலைக்கான காரணம் குறித்தும் விசாரித்து வருகின்றனர்.