அவிநாசி அருகே முதிய தம்பதி விஷம் குடித்து தற்கொலை!

 
dead

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே வயதான தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள பெருமாநல்லுர் எஸ்.எஸ் நகரில் வசித்து வருபவர் கோவிந்தராஜ்(62). இவரது மனைவி வசந்தா(57). இத்தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இதனால் தம்பதியினர் இருவரும் தனியாக வாழ்ந்து வந்தனர். இதனிடையே வசந்தா நீண்ட நாட்களாக உடல்நல குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் அவருக்கு கர்ப்பப்பையில் பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. இதற்காக மருத்துவரிடம் சென்றபோது, அவர் மாத்திரைகளை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தி உள்ளார். இதனை தொடர்ந்து, அவர் மாத்திரைகளை எடுத்து வந்துள்ளார். இந்த நிலையில், வயதான காலத்தில் தங்களை யாரும் கவனிக்கவில்லை என தம்பதியினர் மனவேதனையில் இருந்து வந்துள்ளனர். இதுகுறித்து உறவினர்களிடம் கூறி மனம் வருந்தி வந்துள்ளனர். 

tiruppur

இந்த நிலையில், யாருக்கும் பாரமாக இருக்கக்கூடாது என எண்ணிய கோவிந்தராஜ், வசந்தா தம்பதியினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு வீட்டில் விஷத்தை குடித்து தற்கொலை கொண்டனர். நேற்று காலை நீண்ட நேரமாகியும் வசந்தா வீட்டின் கதவு திறக்காததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்தனர். அப்போது, தம்பதியினர் இருவரும் இறந்த நிலையில் சடலமாக கிடந்தனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், பெருமாநல்லுர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு  சென்று இருவரது உடல்கையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.