ராசிபுரம் அருகே முதிய தம்பதி விஷம் குடித்து தற்கொலை... கவனிக்க யாரும் இல்லாததால் சோகம்!

 
rasipuram

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கவனிக்க யாரும் இல்லாததால் வயதான தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அருகே உள்ள அரியாக்கவுண்டம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் முருகேசன் (65) -  பாப்பா (60) தம்பதியினர். இவர்களுக்கு லதா, சுமதி என்ற 2 மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகி கணவருடன் வசித்து வருகின்றனர். இதனால் முருகேசன் - பாப்பா தம்பதி தனியே வசித்து வந்தனர். முருகேசன், அங்குள்ள அப்பள நிறுவனத்தில் கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வந்தார். குறைந்த அளவே வருமானம் இருந்ததால் குடும்பத்தை நடத்த தம்பதியினர் சிரமப்பட்டு வந்துள்ளனர்.

rasipuram

மேலும், வயதான காலத்தில் தங்களை மகள்கள் கவனிக்கவில்லை என்றும் மனவேதனையில் இருந்து வந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த சில நாட்களாக முருகேசனுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த முருகேசன், பாப்பா தம்பதியினர் தற்கொலை  செய்து கொள்ள முடிவெடுத்தனர். இதனை அடுத்து, கடந்த புதன்கிழமை இரவு இருவரும் விஷத்தை குடித்தனர். இருவரும் மயங்கிய நிலையில் கிடப்பதை கண்ட அக்கம் பக்கத்தினர், உடனடியாக அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

rasipuram

அங்கு அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இருவரும் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை அடுத்து, நாமகிரிபேட்டை போலீசார், இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த தற்கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.