சூலூர் அருகே முட்டை லாரி - கண்டெய்னர் லாரி நேருக்கு நேர் மோதி விபத்து : ஓருவர் பலி, 3 பேர் படுகாயம்!

 
accident

கோவை மாவட்டம் சூலூர் அருகே இன்று அதிகாலை முட்டை லாரி மீது கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும், கண்டெய்னர் லாரி ஓட்டுநர் உள்ளிட்ட 3 பேர் பலத்த காயமடைந்தனர்.

ஈரோட்டில் இருந்து முட்டை பாரம் ஏற்றிக்கொண்டு மினி லாரி ஒன்று இன்று அதிகாலை கேரள மாநிலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. லாரியை ஈரோட்டை சேர்ந்த கோபால கிருஷ்ணன் என்பவர் ஓட்டிச் சென்றார். அவருடன் உதவியாளர் துரைசாமி உள்ளிட்ட 2 பேர் உடன் சென்றனர். இன்று அதிகாலை 4.30 மணியளவில் கோவை மாவட்டம் எல் அண்ட் டி தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளலூர் பிரிவு அருகே சென்றபோது, எதிரே கேரளாவில் இருந்து கோவை நோக்கி வந்த கண்டெய்னர் லாரி, மினிலாரி மீது நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது.

lorry

இதில் முட்டை லாரி சாலையோரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து அப்பளம் போல நொறுங்கியது. இந்த விபத்தில் முட்டை லாரி ஓட்டுநர் கோபால கிருஷ்ணன், உதவியாளர் துரைசாமி, கண்டெய்னர் லாரி ஒட்டுநர் நித்திஸ் மற்றும் அவரது உதவியாளர் என 4 பேர் பலத்த காயமடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சூலூர் போலீசார், விபத்தில் காயமடைந்த 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே ஓட்டுநர் கோபால கிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்தார்.

மற்ற 3 பேருக்கும் மருத்துவனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து, விபத்தில் பலியான ஓட்டுநரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே விபத்து காரணமாக எல் அண்ட் டி புறவழிச் சாலையில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.