வெளிமாநில வியாபாரிகள் வராததால் ஈரோடு ஜவுளி சந்தையில் மொத்த வியாபாரம் பாதிப்பு!

 
textile

தொடர் மழையின் காரணமாக வெளி மாநில வியாபாரிகள் வராததால் ஈரோடு கனி மார்க்கெட் ஜவுளி சந்தையில் மொத்த வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. 

ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே புகழ்பெற்ற கனி மார்க்கெட் ஜவுளி சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் திங்கட்கிழமை தொடங்கி, செவ்வாய்க்கிழமை மாலை வரை ஜவுளி சந்தை நடைபெறுவது வழக்கம். ஜவுளி சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் வந்து மொத்த விலைக்கு ஜவுளியை கொள்முதல் செய்து செல்வர். ஜவுளி சந்தையில் சாதாரண நாட்களில் ரூ.1 கோடி வரையிலும், விஷேச நாட்களில் ரூ.4 கோடி வரையிலும் வர்த்தகம் நடைபெறும்.

textile

இந்த நிலையில், கடந்த வாரம் ஓணம் பண்டிகையை ஒட்டி ஜவுளி வியாபாரம் விறுவிறுப்புடன் நடைபெற்றது. இந்த நிலையில், நேற்று கூடிய சந்தையில் வெளி மாநில வியாபாரிகள் வராததால் மொத்த வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. கேரளாவில் நாளை ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால் அம்மாநில வியாபாரிகள் வராத நிலையில், கர்நாடகா, ஆந்திர மாநிலங்களில் கனமழை பெய்து வருவதால் அந்த மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வரவில்லை. அதே வேளையில் உள்ளுர் வியாபாரிகள் ஓரளவு வந்திருந்ததால் சில்லறை வியாபாரம் சுமாராக நடைபெற்றது. நேற்றைய ஜவுளி சந்தையில் மொத்த வியாபாரம் 10 சதவீதம் வரையிலும், சில்லறை வியாபாரம் 30 சதவீதம் வரையிலும் நடைபெற்றதாக ஜவுளி வியாபாரிகள் தெரிவித்தனர்.