ஜோலார்பேட்டை அருகே மதுபோதையில் தண்ணீரில் தவறி விழுந்த தொழிலாளி பலி!

 
dead

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே மதுபோதையில் வெள்ளநீரில் தவறி விழுந்த  தொழிலாளி நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி கிராமம் ஏரிக்கோடி பண்ணாரி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் அழகிரி. இவரது மகன் அருள் (46). கூலி தொழிலாளி. இவரது மனைவி கலைச்செல்வி. இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகளும், 5 மாத கைக் குழந்தையும் உள்ளனர். இந்த நிலையில், திங்கட்கிழமை இரவு வீட்டில் இருந்து சென்ற அருள், பின்னர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பவில்லை.

jolarpet

இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இந்த நிலையில், நேற்று காலை ஏலகிரி ஏரியை ஒட்டியுள்ள சமாதியை சூழ்ந்துள்ள வெள்ள நீரில் அருள் சடலமாக கிடந்தார். இதுகுறித்து கிராம மக்கள் ஜோலார்பேட்டை போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அருளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், அருள் அளவுக்கு ஏரியை ஒட்டிய சுடுகாட்டு பகுதியில் அளவுக்கு அதிகமாக மது அருந்தியதும், சாமாதியை சூழ்ந்துள்ள வெள்ளநீரில் தவறி விழுந்து நீரில் மூழ்கி  உயிரிழந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.