தருமபுரியில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி... 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்பு!

 
chess

தருமபுரி மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நடைபெற்ற மாவட்ட அளவிலான செஸ் போட்டியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

சென்னை மாமல்லபுரத்தில் வரும் 28ஆம் தேதி முதல் செப்டம்பர் 10ஆம் தேதி வரை 44-வது செஸ் ஒலிம்பியாட் -2022 போட்டிகள் நடைபெற உள்ளது. இதுகுறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் தருமபுரியில் உள்ள அனைத்து அரசுப்பள்ளிகளிலும் 8 மற்றும் 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு செஸ் போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியில் தருமபுரி மாவட்டத்தில் 225 அரசுப்பள்ளிகளை சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். 

chess

மேலும், 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறுவது குறித்து  பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 44-வது செஸ் ஒலிம்பியாட் சின்னங்களுடன் கூடிய ஒட்டு வில்லைகள் பொருத்தப்பட்ட பேருந்து பல்வேறு பள்ளிகளில் காட்சிபடுத்தப்பட்டு மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.

தொடர்ந்து, தருமபுரி அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று 44வது செஸ் ஒலிம்பியாட் இலட்சினை பொறிக்கப்பட்ட வண்ண பலுன்கள் மற்றும் பதாகைகளை கையில் ஏந்தி நம்ம செஸ் நம்ம பெருமை குறித்த உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சாந்தி, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முத்துகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.