"மாவட்ட நிர்வாகம் குறிப்பிட்ட இடங்களில் மட்டும் விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும்" - நாமக்கல் ஆட்சியர்!

 
collector namakkal

நாமக்கல் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டத்தின்போது, விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தால் குறிப்பிடப்பட்டு உள்ள இடங்களில் மட்டும் கரைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், களிமண்ணால் செய்யப்பட்டதும் மற்றும் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ், பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் கலவையற்றதுமான, சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப் பொருள்களால் மட்டுமே செய்யப்பட்டதுமான  விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும். 

ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாக்கோல் பொருட்களை பயன்படுத்த கண்டிப்பாக அனுமதிக்கப்படாது. வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் மட்டுமே சிலைகள் தயாரிக்க அல்லது சிலைகள்/ பந்தல்களை அலங்கரிக்க பயன்படுத்த வேண்டும். சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத ரசாயன சாயம் / எண்ணெய் வண்ணப்பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. சிலைகளின் மீது எனாமல் மற்றும் செயற்கை  சாயத்தை அடிப்படையாக கொண்ட வண்ணப்பூச்சுக்களை  பயன்படுத்தக்கூடாது. மாற்றாக சுற்றுச்சூழலுக்குகந்த நீர் சார்ந்த  / மக்கக்கூடிய /  நச்சுக்கலப்பற்ற இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.

Ganesha

விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள கீழ்கண்ட இடங்களில் மட்டுமே தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறைகளின்படி கரைக்க அனுமதிக்கப்படும்.

1.திருச்செங்கோடு வட்டம் எஸ்.இயைமங்கலம், காவிரி ஆற்றங்கரையில் உள்ள கோவில் அருகே. 2. குமாரபாளையம் வட்டம் பள்ளிப்பாளையம் அக்ரஹாரம், ஓங்காளியம்மன் கோவில் படித்துறை, 3.  புதுப்பாளையம் அக்ரஹாரம், காவேரி ஆர்.எஸ்.(ரயில்வே பாலம்) 4. பாப்பாம்பாளையம், முனியப்பன் கோவில் பின்புறம், 5. கொக்கராயன்பேட்டை, கொக்கராயன் பாலத்தின் கீழ் விநாயகர் கோவில் அருகே, 6. குமாரபாளையம் அக்ரஹாரம் கிராமம், பழைய பாலம் அண்ணா நகர், 7. குமாரபாளையம் அமானி, கலைமகள் வீதி, 8, பரமத்திவேலுர் வட்டம் வேலுர், காசி விஸ்வநாதர் கோவில் அருகில், 9. சோழ சிராமணி, பேரேஜ் கீழ் பகுதியில் ஈஸ்வரன் கோவின் பின்புறம்,  10. மோகனுர் வட்டம் மோகனுர், சிவன் கோவில் அருகில் உள்ள காவிரி ஆற்றங்கரை படித்துறை.

விநாயக சதுர்த்தி விழாவினை சுற்றுச்சூழலை பாதிக்காதவாறு கொண்டாடும்படி பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் விபரங்களுக்கு  மாவட்ட ஆட்சியர், காவல் துறை கண்காணிப்பாளர், மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஆகியோரை அணுகலாம் என ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் தெரிவித்துள்ளார்.