நம்பியூர் ஒன்றிய பகுதிகளில் குடிநீர் விநியோகத்தில் குளறுபடி; ஊராட்சி மன்ற தலைவர்கள் வெளிநடப்பு!

 
nambiyur

நம்பியூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் முறையாக குடிநீர் வழங்காத குடிநீர் வடிகால் வாரியத்தை கண்டித்து, ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

ஈரோடு மாவட்டம் நம்பியூர் ஊராட்சி ஒன்றியத்தில் கெட்டிசெவியூர், பொலவபாளையம், கோசனம், ஆண்டிபாளையம், வேமாண்டம்பாளையம் உள்பட 15 ஊராட்சிகள் உள்ளது. இந்த நிலையில், ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான மாதாந்திர கூட்டம் இன்று  நம்பியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தை நம்பியூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சக்திவேல் நடத்தினார். ஒன்றிய குழு தலைவர் சுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் 15 ஊராட்சிகளின் தலைவர்கள் மற்றும் துறைசார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு ஊராட்சியில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் குறைபாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

nambiyur

இந்த கூட்டத்தில் பேசிய கெட்டிசெவியூர் ஊராட்சி மன்ற தலைவர் மகுடேஸ்வரன், கெட்டிசெவியூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் முறையாக குடிநீர் வினியோகம் செய்வதில்லை என்றும், குடிநீர் குழாய்கள் சரியாக பராமரிப்பு செய்யப்படுவதில்லை என்றும் புகார் தெரிவித்தார். இதனால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக குடிநீர் குழாய்கள் சரி செய்யப்படாமல் கிடப்பில் போடப்பட்டு உள்ளதாகவும், பொலவபாளையம், கோசனம், ஆண்டிபாளையம் உள்ளிட்ட ஊராட்சிகளிலும் இதே நிலைமை உள்ளதாகவும் தெரிவித்தார். 

இது தொடர்பாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறிய மகுடேஸ்வரன், இந்த விவகாரத்தில் உடனடியாக மாவட்ட ஆட்சியர் தலையிட்டு ஊராட்சிகளின் பிரச்சினைகளை தீர்த்து வைக்க வேண்டுமென கூறினார். தொடர்ந்து, கோரிக்கையை வலியுறுத்தி நம்பியூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் சுப்பிரமணியம் தலைமையில், ஊராட்சி மன்றத் தலைவர்கள் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.