மொடக்குறிச்சி அருகே கோவில் திருவிழா நடத்துவதில் தகராறு... வட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை

 
erode

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே மதுரை வீரன் கோவில் திருவிழா நடத்துவது தொடர்பாக வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட்டது. 

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள் குளூரில் மதுரைவீரன் - கன்னிமார் சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோவிலில், சுமார் 400 குடும்பங்களை சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட கிராம அருந்ததியர் (பாத கட்டிகுல ) வழிபட்டு வருகின்றனர். இந்த நிலையில், கடந்த 7 ஆண்டுகளாக இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக கோவில் திருவிழா நடைபெறாமல் இருந்து வந்தது. 

erode

இந்த விவகாரம் தொடர்பாக கோவில் முக்கிய நிர்வாகிகள், அருந்தியர் இளைஞர் பேரவை மற்றும் மாவீரன் பொல்லான் பேரவை தலைவர் ஈரோடு வடிவேல் ராமனை சந்தித்து, தடைபட்ட திருவிழாவை நடத்த நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை வைத்தனர். இதனை அடுத்து, கோவில்  திருவிழா நடத்துவது தொடர்பாக நேற்று மொடக்குறிச்சி வட்டாட்சியர் சண்முகசுந்தரம் தலைமையில் இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதில் சுமூக தீர்வு ஏற்பட்டதை தொடர்ந்து, வரும் நாட்களில் மதுரைவீரன் கோயில் திருவிழாவை நடத்த மொடக்குறிச்சி வட்டாட்சியர் சண்முக சுந்தரம் அனுமதி வழங்கி உத்தரவிட்டார். இந்த பேச்சுவார்த்தையில் மொடக்குறிச்சி ஒன்றிய பெருந்தலைவர் கணபதி, ஊராட்சி மன்ற தலைவர் செல்வராஜ் மற்றும் மொடக்குறிச்சி காவல் ஆய்வாளர்  தீபா மற்றும் 40-க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.