அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியில் தருமபுரி ஆட்சியர் திடீர் ஆய்வு : மாணவர்களுக்கு தரமான உணவு வழங்க உத்தரவு!

 
dd

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியில் திடீர் ஆய்வுமேற்கொண்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி, மாணவர்களுக்கு தரமான உணவு வழங்காவிட்டால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரித்தார்.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே பாப்பாரப்பட்டியில், அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதி  செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் நேற்று தருமபுரி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி திடீர் ஆய்வுமேற்கொண்டார். அப்போது, விடுதியில் தங்கி பயிலும் மாணவர்களுடன் கலந்துரையாடிய ஆட்சியர், அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் உணவு குறித்தும், மாணவர்களுக்கு விடுதியில் உள்ள வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார். தொடர்ந்து, விடுதி மாணவர்களுக்கு உணவு சமைத்து வழங்குவதற்கு இந்த விடுதிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள  அரிசி, பருப்பு, மளிகை பொருட்கள், எண்ணெய் உள்ளிட்ட பொருட்களின் இருப்பு குறித்தும், அதற்கான பதிவேடுகளையும் ஆய்வுசெய்தார். தொடர்ந்து, மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிய உணவின் தரம் குறித்து, அந்த உணவை சாப்பிட்டு ஆய்வுசெய்தார். 

dd

இதனை தொடர்ந்து, விடுதி மாணவ, மாணவிகளுக்கு  அரசு அளித்துள்ள பட்டியலின்படி, தவறாமல் உணவுகளை தரமாக வழங்குவதோடு, அனைத்து  விடுதிகளிலும் தேவையான அடிப்படை வசதிகளை முழுமையாக ஏற்படுத்தி, அதனை தொடர்ந்து பாதுகாத்து பராமரிப்பதோடு, விடுதிகளை துய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என விடுதி அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு உத்தரவிட்டார். அத்துடன், அரசின் விதிகளின்படி விடுதி மாணவ - மாணவிகளுக்கு தரமான உணவுகளை வழங்காதது கண்டறியப்பட்டால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆட்சியர் திவ்யதர்ஷினி எச்சரிக்கை விடுத்தார்.

dd

முன்னதாக, பாலக்கோடு வட்டம் சோமனஅள்ளி மற்றும் தருமபுரி வட்டம் அன்னசாகரம் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் நியாய விலைக்கடையில் ஆட்சியர் திவ்யதர்ஷினி ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது தருமபுரி வட்டாட்சியர் ராஜராஜன், பென்னாகரம் வட்டாட்சியர் அசோக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.