தாராபுரம் அமராவதி ஆற்றில் மூழ்கி கட்டிட தொழிலாளி மாயம்... தேடுதல் பணி தீவிரம்!

 
drowned

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே அமராவதி ஆற்றில் குளித்த கட்டிட தொழிலாளி தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள மூலனுரை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகன் தினேஷ் குமார்(24). கட்டிட தொழிலாளி. இவர் நேற்று தனது நண்பர்களுடன் தாராபுரம் அமராவதி ஆற்றுக்கு குளிக்க சென்றுள்ளார். அங்குள்ள தடுப்பணை பகுதியில் குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக தினேஷ் குமார் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள், இதுகுறித்து தாராபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன் பேரில், தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆற்றில் இறங்கி தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

dharapuram

இரவு 7 மணி வரை தேடியும் அவர் கிடைக்காத நிலையில், வெளிச்சமின்மையால் தேடுதல் பணி நிறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து, இன்று காலை மீண்டும் தேடுதல் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆற்றில் அதிகளவு தண்ணீர் செல்வதால் அவரது உடலை தேடும் பணியில்  தொய்வு ஏற்பட்டு உள்ளது. இளைஞர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.