சதுரகிரி மலைக் கோவிலுக்கு இன்று முதல் 4 நாட்கள் பக்தர்கள் செல்ல அனுமதி!

 
sathuragiri

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரிமலை சுந்தர மகாலிங்கம் சுவாமி கோவிலுக்கு இன்று முதல் 4 நாட்கள் பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கி, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பிரசித்தி பெற்ற சதுரகிரிமலை சுந்தர மகாலிங்கம் சுவாமி கோவில் அமைந்துள்ளது. பிரதோஷ நாளிலில் இருந்து, தொடர்ச்சியாக 4 நாட்கள் என மாதத்தில் 8 நாட்கள் மட்டுமே பக்தர்கள் மலைக் கோவிலுக்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்படும். கடந்த சித்திரை மாத வளர்பிறை பிரதோஷம் மற்றும் சித்திரா பௌர்ணமி நாட்களில், மலைப்பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக கோவிலுக்கு பக்தர்கள் செல்ல, மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. 

sathuragiri

இந்த நிலையில், இன்று சித்திரை மாத தேய்பிறை பிரதோஷம், வரும் சனிக்கிழமை சித்திரை மாத அமாவாசை உள்ளிட்ட நாட்களில் பக்தர்கள் மலைக் கோவிலுக்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்படுவதாக, விருதுநகர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, இன்று வியாழக்கிழமை, வரும் 30ஆம் தேதி சனிக்கிழமை சித்திரை மாத அமாவாசை மற்றும் மே 1ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை உள்ளிட்ட 4 நாட்களும் பக்தர்கள் சுந்தர மகாலிங்கம் சுவாமி கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

மேலும், மலையேற வருபவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்கவும், 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளும், 60 வயதிற்கு மேற்பட்ட முதியோரும் மலையேற அனுமதி இல்லை என்றும் வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல், காய்ச்சல் உள்ளவர்கள் மலைக்கு வருவதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.