கடனை திருப்பிக்கேட்டு தொழிலாளியை மரத்தில் கட்டிவைத்து தாக்குதல் - ஒருவர் கைது!

 
dgl

நத்தம் அருகே கடனை திருப்பி தராததால் இளைஞரை மரத்தில் கட்டிவைத்து தாக்கிய நபரை கைதுசெய்த போலீசார், தலைமறைவாக உள்ள அவரது பெற்றோரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அடுத்துள்ள சாத்தம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் ராமன் (42). இவர் கடந்த ஓராண்டுக்கு முன்பு, அதே பகுதியை சேர்ந்த அம்பலம் மகன் ராஜேசிடம் (35)  ரூ.1 லட்சம் கடனாக வாங்கியுள்ளார். இதற்காக மாதந்தோறும் முறையாக வட்டி கட்டி வந்துள்ளார். இதனிடையே கொரோனா காலத்தில் சரிவர வேலை இல்லாததால் வட்டி கட்டவில்லை என கூறப்படுகிறது. பின்னர் ராமன் திருப்பூருக்கு சென்று ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன் உறவினர் திருமண நிகழ்ச்சிக்காக ராமன், அவரது மனைவி ஜோதிமணி ஆகியோர் சாத்தம்பாடிக்கு வந்துள்ளனர். இதனை அறிந்த ராஜேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர், ராமனை பிடித்து அங்குள்ள மரத்தில் கட்டிவைத்து பணத்தை திருப்பி கேட்டு அவரை கைகளால் தாக்கி உள்ளனர். 

arrest

மேலும், மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை அவரை மரத்திலேயே கட்டி வைத்து துன்புறுத்தி உள்ளனர். இந்த சம்பவம் குறித்து ராமனின் மனைவி ஜோதிமணி, நத்தம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார், ராஜேஷ் மற்றும் அவரது பெற்றோர் மீது கந்து வட்டி பிரிவின் கீழ் வழக்குப்பதிந்து, ராஜேசை கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள அவரது தந்தை அம்பலம், தாய் சாந்தி ஆகியோரை தீவிரமாக தேடி வருகின்றனர். இதனிடையே, ராஜேஷை மரத்தில் கட்டி வைத்திருப்பது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.