காதல் திருமணம் செய்த மகள்... விரக்தியில் கணவன், மனைவி அடுத்தடுத்து தற்கொலை!

 
tuti

தூத்துக்குடி அருகே மகள் காதல் திருமணம் செய்து கொண்டதால் விரக்தியில் தாய், தந்தை அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகேயுள்ள கீழ வல்லநாடு கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர்கள் சின்னதுரை (45) - சங்கரம்மாள் (40) தம்பதியினர். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். பி.காம் படித்துள்ள இவர்களது மகள், கடந்த சில நாட்களுக்கு முன் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கிராமத்தை சேந்த இளைஞரை காதல் திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனால்  மனமுடைந்த சங்கரம்மாள் திங்கட்கிழமை இரவு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதிகாலையில் மனைவி தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்த சின்னதுரை, சாயர்புரம் பகுதியில் உள்ள தனது விவசாய தோட்டத்தில் பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

poison

இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த சாயர்புரம் போலீசார், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சின்னதுரையை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சின்னதுரை உயிரிழந்தார். தொடர்ந்து, முறப்பநாடு போலீசார் இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மகள் காதல் திருமணம் செய்ததால் தாய், தந்தை அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.