பெருந்துறையில் இடிதாக்கி பழமையான கோவில் கோபுரம் சேதம்... எம்எல்ஏ எஸ்.ஜெயக்குமார் நேரில் ஆய்வு!

 
perundurai

ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியில் நேற்றிரவு பலத்த மழை பெய்த நிலையில், இடி தாக்கியதில் அங்குள்ள பழமையான பெருமாள் கோவில் கோபுரம் சேதமடைந்தது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை புதிய பேருந்து நிலையம் அருகே பழமை வாய்ந்த அருள்மிகு பிரசன்ன வெங்கடரமண ஸ்வாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இந்த நிலையில், நேற்று இரவு பெருந்துறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. மழையின்போது, பிரசன்ன வெங்கடரமண சுவாமி கோயிலின் மீது எதிர்பாராத விதமாக மின்னல் தாக்கியது. இதில் கோபுரங்கள் சிதைந்து இடிந்து விழுந்தன. இதனால், மழைநீர் கோவில் கருவறைக்குள் புகுந்தது.

temple

அறிவியல் ரீதியாக கோவில் கோபுர கலசங்கள் இடி மின்னலை ஈர்த்துக்கொள்ளும் தன்மை கொண்டுள்ளதால், பெருந்துறை புதிய பேருந்து நிலையம் பகுதியில் நடக்கவிருந்த பெரும் சேதம் தவிர்க்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த பெருந்துறை தொகுதி அதிமுக எம்எல்ஏ எஸ்.ஜெயக்குமார், சேதமடைந்த கோவில் கோபுரத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, சேதம் விபரங்கள் குறித்து இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகளுடன் கேட்டறிந்தார்.

மேலும், சேதமடைந்த கோபுரத்தை முழுவதுமாக இடித்துவிட்டு புதிய கோபுரம் கட்ட வேண்டிய சூழல் உள்ளதாகவும், இதனால் விரைவில் கட்டுமான பணியை மேற்கொள்ள வேண்டுமெனவும் எம்எல்ஏ எஸ்.ஜெயக்குமார் அதிகாரிகளை கேட்டுக் கொண்டார். ஒருபுறம் கோயில் கோபுரங்கள் சேதமடைந்தது பக்தர்களை வருத்தமடைய செய்தாலும், பெருந்துறை பகுதியில் பல்லாயிரக்கணக்கான உயிர்களை காத்திட்ட இந்த கோயில் மகிமை குறித்து பக்தர்கள் நெகிழ்ச்சி கொள்கின்றனர்.