ராணிப்பேட்டை அருகே மின்சாரம் தாக்கி கிரேன் ஓட்டுநர் பலி!

 
dead body

ராணிப்பேட்டை அருகே தனியார் இரும்பு தொழிற்சாலையில் மின்சாரம் தாக்கி கிரேன் ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார்.

ராணிப்பேட்டை அருகே உள்ள லாலபேட்டை பகுதியை சேர்ந்தவர் ஜெகதீசன். இவர் அரசு மருத்துவமனையில் 108 ஆம்புலன்சில் தற்காலிக ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். மேலும், சொந்தமாக கிரேன் வாகனம் வைத்து தொழில் செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி யமுனா என்ற மனைவியும், 2 ஆண் குழந்தைகளும் உள்ளனர்.இந்த நிலையில், நேற்று கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள தனியார் இரும்பு தொழிற்சாலையில், ஜெகதீசன் தனது கிரேன் மூலம் உதிரி பாகங்களை ஏற்றும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அவர் மீது மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

ranipettai

இதனிடையே தனியார் தொழிற்சாலை நிர்வாகம் ஜெகதீசன் மரணம் குறித்து குடும்பத்தினருக்கு முறையாக தகவல் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஜெகதீசனின் குடும்பத்தினர் தொழிற்சாலை நிர்வாகத்தை கண்டித்து லாலபேட்டை பகுதியில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிப்காட் போலீசாரின் சமரச பேச்சுவார்த்தைக்கு பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.