"கடனில் தவிக்கும் மகனுக்கு உதவ முடியலேயே"... வேதனையில் உயிரை மாய்த்த தம்பதி!

 
dead body

கன்னியாகுமரி அருகே கடனால் தவிக்கும் மகனுக்கு உதவ முடியாததால் கணவன், மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே உள்ள வடக்கன்பாகம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுக பெருமாள் (63). இவர் சென்னை துறைமுகத்தில் பொறியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருக்கு பிரேமலதா (58) என்ற மனைவியும், ஆதவன் (32), மாலன் (28) என்ற 2 மகன்களும் உள்ளனர். மகன்கள் இருவருக்கும் திருமணமாகிய நிலையில், அவர்கள் சென்னையில் ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில், மூத்த மகன் ஆதவன், கடந்த சில ஆண்டுகளுக்கு சொந்தமாக நிறுவனம் ஒன்றை துவங்கி உள்ளார். கொரோனா அச்சம் காரணமாக தொழிலில் பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் பலரிடமும் கடன் வாங்கி உள்ளார். இதனால் அவர் கடும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.

kumari gh

மகனின் நிலையை எண்ணி வேதனை அடைந்த ஆறுமுக பெருமாள் - பிரேமலதா தம்பதியினர், தங்களது பூர்வீக சொத்துக்களை விற்று, கடனை அடைக்க முயன்றுள்ளனர். இந்த நிலையில், பத்திரப்பதிவு பதிவில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக உரிய நேரத்தில்  பணம் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவி இருவரும் மனவேதனையில் இருந்துள்ளனர். இந்த நிலையில், நேற்று காலை ஆதவன் பெற்றோரை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் நீண்ட நேரமாக அவர்கள் செல்போனை எடுக்கவில்லை. இதனால் அருகில் உள்ளவர்களுக்கு தகவல் அளித்து வீட்டிற்கு சென்று பார்க்கும்படி கூறியுள்ளார். இதனை அடுத்து, பக்கத்து வீட்டினர் சென்று பார்த்தபோது ஆறுமுக பெருமாளின் வீடு உட்புறமாக பூட்டிகிடந்துள்ளது.

இதனால் அவர்கள் கதவை உடைத்து சென்று பார்த்தபோது, ஆறுமுக பெருமாள், பிரேம லதா ஆகியோர் பழத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட நிலையில் கிடந்தனர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர், மணவாளக்குறிச்சி போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து,  விசாரித்து வருகின்றனர். கடனில் தவிக்கும் மகனுக்கு உதவி முடியாததால் வேதனையில் பெற்றோர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.