ஈரோட்டில் இன்று 1,597 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்... ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்திக்கொண்ட பொதுமக்கள்!

 
vaccine

ஈரோடு மாவட்டத்தில் இன்று 1,597 இடங்களில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வரும் நிலையில், பொதுமக்கள் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக இன்று அனைத்து மாவட்டங்களிலும்  மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகிறது. இதன்படி, ஈரோடு மாவட்டத்தில் இன்று அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார மையங்கள், பள்ளிகள் உள்ளிட்ட ஆயிரத்து 597 மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி காலை  7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் மற்றும் 2ஆம் தவணை தடுப்பூசியும், 18 வயதுக்கு மேற்பட்ட 2ஆம் தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதம் கடந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்தப்பட்டு வருகிறது.

vaccine

இன்றைய முகாமில் ஈரோடு மாவட்டத்தில் 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இப்பணியில் மாவட்டம் முழுவதும் 3 ஆயிரத்து 196 பணியாளர்கள் மற்றும் 70 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் சிரமமின்றி தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் விதமாக, மக்கள் அதிககூடும் இடங்களான ஈரோடு பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டு, பயணிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. பொதுமக்கள் ஆர்வமுடன் முகாம்களுக்கு சென்று தடுப்பூசியை செலுத்திக்கொண்டனர். குறிப்பாக 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 2 தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதங்களை கடந்தவர்கள், பூஸ்டர் தடுப்பூசியை ஆர்வத்துடன் போட்டுக் கொண்டனர்.