கோவையில் சமையல் மாஸ்டர் அடித்துக்கொலை... 5 திருநங்கைகள் கைது!

 
murder

கோவை துடியலூர் பகுதியில் தனியார் ஓட்டல் சமையல் மாஸ்டர் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் 5 திருநங்கைகளை போலீசார் கைதுசெய்தனர்.
 
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியை சேர்ந்தவர் தர்மலிங்கம்(47). இவர் கோவை மாவட்டம் துடியலூர் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் சமையல் மாஸ்டராக பணிபுரிந்து வந்தார். இவர், கடந்த 9ஆம் தேதி இருசக்கர வாகன விபத்தில் சிக்கியதாக கூறி படுகாயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த சம்பவம் குறித்து துடியலூர் போலீசார், சிகிச்சையில் இருந்த தர்மலிங்கத்திடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். 

cbe thudiyalur

இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, கடந்த 8ஆம் தேதி இரவு தர்மலிங்கம், தன்னுடன் பணிபுரியும் பிரவீனுடன், கோவை -மேட்டுப்பாளையம் சாலையில் திருநங்கை ஒருவருடன் பாலியல் செயலுக்கு சென்றுள்ளனர். அப்போது, அந்த திருநங்கைக்கும், அவர்களுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த 5-க்கும் மேற்பட்ட திருநங்கைகள், இருவரையும் சரமாரியாக தாக்கியுள்ளனர். அப்போது, பிரவீன் தப்பியோடிய நிலையில், தர்மலிங்கம் படுகாயம் அடைந்தது தெரியவந்தது.

இதனை அடுத்து, துடியலூர் போலீசார் இந்த தாக்குதல் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில், தர்மலிங்கம் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதனை அடுத்து, வழக்கை கொலை வழக்காக மாற்றிய போலீசார், இந்த சம்பவத்தில் தொடர்புடைய கவுண்டம்பாளையத்தை சேர்ந்த திருநங்கைகள் ரேஷ்மிகா, மம்தா, கௌதமி, ஹர்னிகா, ரூபி ஆகியோரை கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள ஒருவரை தேடி வருகின்றனர்.