ஈரோடு மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்கள் 4 -வது நாளாக போராட்டம்... பல்வேறு அரசியல் கட்சியினர் நேரில் சந்தித்து ஆதரவு

 
erode

ஈரோட்டில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் நேற்று 4வது நாளாக போராட்டத்தில்  ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாநகராட்சியில் துப்புரவு பணியை அவுட் சோர்சிங் முறையில் தனியார் இடம் ஒப்படைக்கும் முடிவை கண்டித்து கடந்த 31ஆம் தேதி முதல் பணியை புறக்கணித்து  ஒப்பந்த பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று 4 -வது நாளாக மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு 200க்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்கள், பணியை புறக்கணித்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் ஒப்பந்த பணியாளர்கள், போராட்ட களத்திலேயே உணவு சமைத்து சாப்பிட்டனர்.  

erode

இந்தப் போராட்டத்தில் ஈரோடு மாநகராட்சியில் தூய்மை பணியில் ஈடுபட்டு வரும் 300 பணியாளர்கள் பங்கேற்று உள்ளதால், மாநகர் பகுதியில் நேற்றுடன் 4 நாட்களாக குப்பைகள் அல்ல படாமல் தேங்கி நிற்கிறது. இதனால் தெருக்கள்,  சாலையோரம் குப்பைகள் மலை போல் குவிந்து கிடக்கின்றன. வீடுகளில் சேர்ந்த குப்பைகளை மக்கள் தெருக்களில் வீசி சென்றுவிடுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என ஒப்பந்த பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தொடர்ந்து மாநகராட்சி அலுவலக வளாகத்தில் டவுன் டிஸ்பி ஆனந்தகுமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

erode

இந்த நிலையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் ஒப்பந்த பணியாளர்களை நேற்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் ஈரோடு மாநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் சிவ பிரஷாந்த் தலைமையில் நிர்வாகிகள் சந்தித்து ஆதரவு தெரிவித்து பேசினர். இதேபோல், அதிமுக சார்பில் மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.வி. ராமலிங்கம் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஒப்பந்த பணியாளர்களை நேரில் சந்தித்து அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார்.