மாயாற்றில் தொடர் வெள்ளப்பெருக்கு... பரிசல் இயக்க முடியாததால் விவசாயிகள், மாணவர்கள் தவிப்பு!

 
mayar

சத்தியமங்கலம் அருகே தெங்குமரஹடா பகுதியில் மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பரிசல் இயக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வெளியே செல்ல முடியாமல் கிராம மக்கள், கல்லூரி மாணவர்கள் தவிப்புக்குள்ளாகினர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே அடர்ந்த வனப்பகுதியில் தெங்குமரஹடா, கள்ளம்பாளையம் ஆகிய கிராமங்கள் உள்ளன. இங்கு 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்கள் வேலை, வியாபாரம், மருத்துவ சிகிச்சை உள்ளிட்டவற்றிக்கு ஊரின் இடையே பாயும் மாயாற்றை பரிசில் மூலம் கடந்து சத்தியமங்கலத்திற்கு செல்ல வேண்டும். இதேபோல், இந்த பகுதி விவசாயிகள் நாள்தோறும் தங்களது விளை பொருட்களை பரிசல் மூலம் மாயற்றை கடந்து சத்தியமங்கலம் மார்க்கெட்டுக்கு சென்று விற்பனை செய்வது வழக்கம்.

thengumarahada

தெங்குமரஹடா பகுதி மக்களின் வசதிக்காக நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இருந்து நாள்தோறும் அரசு பேருந்து தெங்குமரஹடா மாயாற்று பகுதிக்கு இயக்கப்பட்டு வருகிறது. மேட்டுப்பாளையம், பவானிசாகர் வழியாக தெங்குரஹடா பகுதிக்கு காலை வரும் பேருந்தில் கல்லூரி மாணவ -மாணவிகள், விவசாயிகள், தொழிலாளர்கள் மாயாற்றை பரிசலில் கடந்து, அங்கு தயாராக நிற்கும் பேருந்தில் ஏறி சத்தியமங்கலம் செல்வார்கள். இதனால் எப்போதும் அந்த பேருந்து கூட்டம் நிறைந்து காணப்படும்.

இந்த நிலையில், நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மாயாற்றில் கடந்த சில நாட்களாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆற்றில் பரிசல் இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தெங்குமரஹடா, கள்ளம்பாளையம் பகுதி விவசாயிகள், கல்லூரி மாணவ- மாணவிகள் கிராமத்துக்குளே முடங்கி கிடக்கின்றனர். இந்த நிலையில், இன்று வழக்கம் போல் கோத்தகிரியில் இருந்து அரசு பேருந்து தெங்குமரஹடா மாயாற்று பகுதிக்கு வந்தது. ஆனால் மாயாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் இன்று பேருந்தில் பயணிகள் யாரும் ஏறவில்லை. இதனால் பேருந்து பயணிகள் இன்றி வெறிச்சோடி மீண்டும் திரும்பிச் சென்றது.