ஈரோடு புதிய பேருந்து நிலையம் குறித்த கலந்தாலோசனை கூட்டம்; அமைச்சர் முத்துச்சாமி பங்கேற்பு!

 
erode

ஈரோடு மாவட்டம் சோலாரில் ரூ.63.50 கோடி மதிப்பில் அமைக்கப்படும் புதிய பேருந்து நிலையத்துக்கான கலந்தாலோசனைக் கூட்டம், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி தலைமையில் இன்று நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் சோலார் பகுதியில்  ரூ.63.50 கோடி மதிப்பில் அமைக்கப்படும் புதிய பேருந்து நிலையத்துக்கான கலந்தாலோசனை கூட்டம், இன்று ஈரோடு மேயர் நாகரத்தினம் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன் உன்னி முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில், நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி, மொடக்குறிச்சி எம்எல்ஏ சரஸ்வதி ஆகியோர் கலந்துகொண்டு, சிறப்புரை ஆற்றினர். 

erode

இந்த கூட்டத்தில், புதிய பேருந்து நிலையம் ரூ.63.50 கோடி செலவில் முற்றிலும் நவீன மயமாக்கப்பட்ட உலகத்தரம் வாய்ந்த பேருந்து நிலையமாக அமைய உள்ளதாகவும், சுமார் 75 பேருந்துகள் நிற்கக் கூடிய அளவு வடிவமைக்கப்பட்டு உள்ளதாகவும் கூறினர்.  மேலும், பயணிகள் காத்திருப்பு அறையில் இருந்து கண்ணாடி சுற்றுச்சுவர் மூலம் பேருந்துகள் வந்து செல்வதை காண முடியும் என்றும், மாற்றுத்திறனாளிகள் வந்து செல்லும் பாதைகள் அமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் பயணிகள் காத்திருப்பு அறைக்கு மேல்தளத்தில் ஓட்டுனர், நடத்துனர்களுக்கான கழிவறைகள், பயணிகளுக்கான கழிவறைகள் மற்றும் வணிக வளாகம் அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.