குமரி அருகே கட்டிட தொழிலாளி கல்லால் தாக்கி கொலை... சிசிடிவி காட்சி அடிப்படையில் கொலையாளிகளுக்கு போலீஸ் வலை!

 
murder

குமரி அருகே கட்டிட தொழிலாளியை கல்லால் தாக்கி கொலை செய்த வழக்கில், சிசிடிவி காட்சி அடிப்படையில் கொலையாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.  

கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே உள்ள எறும்புகாடு புல்லுவிளை பகுதியை சேர்ந்தவர் ராஜதுரை (50). கட்டிட தொழிலாளி. இவருக்கு முருகம்மாள் என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை ராஜதுரை வெளியே புறப்பட்டு சென்றார். பின்னர் இரவு நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் ராஜதுரை கிடைக்கவில்லை.

police

இந்த நிலையில், மறுநாள் காலை மேலகிருஷ்ணன் புதூர் பகுதியில் சாலையோரத்தில் ராஜதுரை கல்லால் தாக்கி கொலை செய்யப்ட்டு கிடந்தார். இதுகுறித்து அந்த பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சுசீந்திரம் போலீசார், அவரது உடலை கைப்பற்றி குமரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, டிஎஸ்பி தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். 

இந்த நிலையில், கொலை நடைபெற்ற பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்தபோது, சாலையில் நடந்து சென்ற ராஜதுரையிடம், இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் தகராறு செய்து அவரை தாக்கும் காட்சிகள் பதிவாகி உள்ளன. இதனை அடுத்து, சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் தப்பியோடிய கொலையாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.