ஈரோடு அருகே பவானி ஆற்றில் மூழ்கி கட்டிட தொழிலாளி பலி!

 
drowned

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே பவானி ஆற்றில் மீன்பிடித்த கட்டிட தொழிலாளி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள புள்ளக்கவுண்டன்பட்டியை சேர்ந்தவர் செல்வராஜ் (45). இவரது மனைவி பூங்கொடி. இத்தம்பதிக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். தம்பதியினர் இருவரும் கட்டிட வேலைக்கு சென்று வந்தனர். இந்த நிலையில், செல்வராஜ் தற்போது ஈரோடு மாவட்டம் காலிங்கராயன் பாளையம் அணைக்கட்டில் நடந்து வரும் அத்திக்கடவு- அவினாசி திட்டம் பணியில் கட்டிட வேலை செய்து வந்தார். கடந்த சனிக்கிழமை காலை வேலை இல்லை என தெரிகிறது. இதனால் செல்வராஜ், உடன் பணிபுரியும் சந்திரன் என்பவருடன் பவானி ஆற்றுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளார்.

erode gh

அப்போது, சந்திரன் வீட்டிற்கு சென்று விட்டு சிறிது நேரத்துக்கு பின் ஆற்றுக்கு வந்துள்ளார். அப்போது, மீன் பிடித்துக் கொண்டிருந்த செல்வராஜை காணவில்லை என கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த சந்திரன், இதுகுறித்து செல்வராஜ் மனைவி பூங்கொடிக்கு தகவல் அளித்தார். அதன் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த பூங்கொடி மற்றும் உறவினர்கள், பவானி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.  

விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள்,  ஆற்றில் தேடியபோது, அற்றில் செல்வராஜ் உடல் மிதந்து செல்வது தெரியவந்தது. தகவலின் பேரில், சித்தோடு போலீசார் செல்வராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.