ஈரோட்டில் காங்கிரஸ் கட்சியினர் சத்தியாகிரக போராட்டம்!

 
cong

நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை மேற்கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஈரோட்டில் காங்கிரஸ் கட்சியினர் சத்தியா கிரக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம், அமலாக்கத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று சத்தியா கிரக போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதன் ஒரு பகுதியாக, ஈரோடு கருங்கல்பாளையம் காந்தி சிலை அருகே காங்கிரஸ் கட்சியினர் சத்யாகிரக போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட தலைவர் மக்கள் ஜி.ராஜன், மாநகர் மாவட்ட பொறுப்பாளர் திருச்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

cong

இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ ஆர்.எம்.பழனிசாமி, மாவட்டத் துணைத் தலைவர் ராஜேஷ் ராஜப்பா உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக பாஜக அரசு விசாரணை என்ற பெயரில் அமலாக்க துறையை ஏவி விடுவதாக குற்றம்சாட்டினர். மேலும், மத்திய அரசு மற்றும் பிரதமர் மோடியை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். போராட்டம் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.