தேனி அருகே வீட்டின் மாடியில் காய வைத்த சிறுத்தை தோல் பறிமுதல்... முன்னாள் கவுன்சிலர் தப்பியோட்டம்!

 
leopard skin

தேனி அருகே முன்னாள் ஊராட்சி கவுன்சிலர் வீட்டின் மாடியில் சிறுத்தை தோல் காய வைக்கப்பட்ட சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

தேனி மாவட்டம் வடபுதுபட்டி ஊராட்சி அம்மாபட்டி பகுதியை சேர்ந்தவர் துரைப்பாண்டி. முன்னாள் ஊராட்சி மன்ற கவுன்சிலர். இவரது வீட்டில் சிறுத்தை தோல் உள்ளதாக வனத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், தேனி வனச்சரகர் செந்தில் குமார் தலைமையிலான வனத்துறையினர் துரைப்பாண்டியின் வீட்டிற்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவரது வீட்டின் மொட்டை மாடியில் சிறுத்தை தோல் மஞ்சள் தடவி பதப்படுத்தி காய வைக்கப்பட்டிருந்ததை கண்டு வனத்துறையினர் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

theni

இதனை அடுத்து, சிறுத்தை தோலை பறிமுதல் செய்த வனத்துறையினர், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள துரைப்பாண்டியை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், சிறுத்தை வேட்டையாடப்பட்டதா? என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  முன்னாள் கவுன்சிலர் வீட்டில் சிறுத்தை தோல் காய வைக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தித உள்ளது.