சிவகிரி அருகே மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் பலி... உடலை வாங்க மறுத்து உறவினர்கள் தொடர் போராட்டம்!

 
sivagiri

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே மின்சாரம் தாக்கி உயிரிழந்த கல்லூரி மாணவரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள கந்தசாமி பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரவி. இவரது மகன் ஹரிசங்கர்(17). இவர் காங்கேயம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். விடுமுறை நாட்களில் வீட்டின் அருகில் உள்ள லேத் பட்டறையில் வேலை செய்து வந்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஹரிசங்கர் லேத் பட்டறையில் வேலை செய்து கொண்டிருந்தபோது அவர் மீது மின்சாரம் தாக்கி தூக்கியது. இதில் பலத்த காயமடைந்த அவரை சிவகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அங்கு ஹரிசங்கர் பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த சிவகிரி போலீசார், ஹரிசங்கரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

perundurai GH

இதனிடையே, மாணவர் ஹரிசங்கரை உரிய பாதுகாப்பு உபகரணங்கள் ஏதுமின்றி வேலை வாங்கிய லேத் உரிமையாளரை கைதுசெய்ய கோரி, சிவகிரி காவல் நிலையத்தை ஹரிசங்கரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, இதுகுறித்து ஈரோடு மாவட்ட எஸ்.பி. அலுவலகத்திற்கு சென்று புகார் மனு அளித்தனர். தொடர்ந்து, நேற்று முன்தினம் மாலை பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முன்பு ஹரிசங்கர் உறவினர்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெருந்துறை ஏடிஎஸ்பி கவுதம் கோயல் தலைமையான போலீசார், ஹரிசங்கரின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனை ஏற்று உறவினர்கள் கலந்து சென்றனர். இந்த நிலையில், இதுவரை மாணவர் ஹரிசங்கர் உடலை வாங்க மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், மாணவர் மரணத்துக்கு காரணமானவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்தால் தான், அவரது உடலை வாங்குவோம் என்று கூறி வருகின்றனர். இதனால் பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.